தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 27 அக்டோபர், 2018

மீண்டும் வென்ற பாகிஸ்தான், தொடரையும் கைப்பற்றியது !

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியை வென்றதன் மூலம் பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. நாளை மூன்றாவது போட்டி எஞ்சியுள்ள நிலையில்
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்று  மூன்று போட்டிகள் கொண்ட T 20 தொடரை 2-0 கைப்பற்றியது. தனது தொடர்ச்சியான பத்தாவது T 20 தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. தமது 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கடந்த முதலாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரர் ஷோயிப் மலிக் அணியில் நேற்று மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.


பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் முதலாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற பாபர் அசாம் இப்போட்டியிலும் அதிக பட்சமாக 45 ஓட்டங்களையும் மொஹமட் ஹஃபீஸ் 40 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பாக கோல்டர் நைல் மூன்று விக்கெட்டுகளையும் பில்லி ஸ்டேன்லேக் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

148 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எனினும் இறுதி ஓவர் வரை அவுஸ்திரேலியாவுக்கு வெல்லும் வாய்ப்புக்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியை போன்றே அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். எனினும் அணியின் வெற்றிக்காக போராடிய கிளென் மக்ஸ்வல் மற்றும் கோல்டர் நைல் ஜோடி கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இருவரும் தமது விக்கெட்டுக்களை பறிகொடுத்ததன் மூலம் பாகிஸ்தான் அணியின் வெற்றி உறுதியானது.

மக்ஸ்வல் 37 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன் கோல்டர் நைல் 27 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் சதாப் கான் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்ததோடு இமாத் வசீம் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இமாட் வசீம் 4 ஓவர்களில் வெறுமனே 8 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து அவுஸ்திரேலிய அணி ஓட்டங்களைப்  பெறுவதை சிரமத்துக்குள்ளாக்கினார்,

இத்தொடர் வெற்றியானது சப்ராஸ் அஹமட் தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட 10 ஆவது சர்வதேச T20 தொடர் வெற்றியாகும்.


இப்போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 8 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றிய இமாத் வசீம் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இவர் முதலாவது போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (28) நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...