தமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..

சனி, 10 நவம்பர், 2018

மோசமான தோல்வியுடன் ரங்கன ஹேரத்துக்கு விடைகொடுத்த இலங்கை !!


இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்தின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்த காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நான்கே நாளில் தோற்று, மிகப்பெரிய தோல்வியுடன் ஹேரத்துக்கு சோகமயமாக விடைகொடுத்தனுப்பியுள்ளது.

இலங்கை அணிக்கு முரளிதரனின் ஓய்வுக்குப் பிறகு அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த ரங்கன ஹேரத்துக்கு இப்படியான தோல்வியுடனான வழியனுப்புதல் மிகத் துரதிர்ஷ்டவசமானது.

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியிருந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி அறிமுக வீரர் பென் ஃபோக்ஸ் பெற்ற சதத்துடன் தமது முதல் இன்னிங்ஸில் 342 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை கிரிக்கெட் அணி 203 ஓட்டங்களையே பெற்றது.


பின்னர் 139 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணியினர் கீட்டன் ஜென்னிங்ஸ் விளாசிய சதத்தின் உதவியோடு 6 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தி இலங்கை அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி இலக்காக 462 ஓட்டங்களை நிர்ணயம் செய்தனர்.
ஜென்னிங்க்ஸ் மிகச்சிறப்பாக துடுப்பாடி ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்களைப் பெற்றார்.


மிகவும் சவாலாக அமைந்த இந்த வெற்றி இலக்கினை அடைவதற்காக இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை அணியின் வீரர்கள் போட்டியின் மூன்றாம் நாள் (8) ஆட்ட நிறைவில் 15 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி காணப்பட்டிருந்தனர்.

வெற்றி இலக்கு மிகவும் பெரியது என்பதால் களத்தில் இருந்த இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் நிதானமாகவே ஓட்டங்களை சேர்க்க தொடங்கினர்.

இரண்டு வீரர்களும் இணைந்து 51 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்காக பகிர்ந்த நிலையில் இலங்கை அணியின் முதல் விக்கெட் பறிபோனது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக கெளஷால் சில்வா மாறியதோடு இங்கிலாந்து சுழல் வீரர் ஜேக் லீச்சினால் LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டு அவர் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.
விக்கெட்டுக்களை பறிபோய்க் கொண்டேயிருந்தன.

பின்னர் நான்காம் நாளின் மதிய போசனத்தை அடுத்து குசல் மெண்டிஸுடன் கைகோர்த்த  அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை அணிக்கு சற்று ஆறுதல் தந்தார். எனினும், இங்கிலாந்து அணியின் சுழல் வீரரான ஜேக் லீச்சினை முகம்கொடுக்க முடியாமல் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். மெண்டிஸ் ஆட்டமிழக்கும்போது 77 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து புதிய வீரராக களம் வந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமாலும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இப்படியாக முக்கிய துடுப்பாட்ட வீரர்களை இழந்த இலங்கை அணிக்கு நான்காம் நாளின் தேநீர் இடைவேளை வரை அஞ்செலோ மெதிவ்ஸ் – நிரோஷன் திக்வெல்ல ஜோடி ஓட்டங்கள் சேர்த்து பெறுதி சேர்த்திருந்தது.

ஆனால், தேநீர் இடைவேளையினை அடுத்து மிகவும் குறுகிய ஓட்ட இடைவெளிகளில் திக்வெல்ல, மெதிவ்ஸ் உட்பட ஏனைய பின்வரிசை வீரர்களினதும் விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி 85.1 ஓவர்களில் 250 ஓட்டங்களுக்கு அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் இழந்து 211 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச்சதம் ஒன்றினை தாண்டி 52 ஓட்டங்களைப் பெற்றதோடு, நிரோஷன் திக்வெல்ல 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். ஏனைய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை காண்பித்தனர்.
இரண்டு இன்னிங்சிலும் மத்தியூஸ் மட்டுமே சிறப்பாகப் பிரகாசித்திருந்தார்.


இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக மொயீன் அலி 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஜேக் லீச் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

இந்த வெற்றியோடு இங்கிலாந்து கிரிக்கெட் அணி காலி சர்வதேச மைதானத்தில் தமது முதல் டெஸ்ட் வெற்றியினை பதிவு செய்துள்ளதோடு, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் பென் போக்ஸ் தெரிவாகியிருந்தார். இதேநேரம், இப்போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரியாவிடை எடுத்துக் கொள்ளும் உலகின் மிக வெற்றிகரமான இடதுகை சுழல் வீரர் ரங்கன ஹேரத்தும் கெளரவிக்கப்பட்டிருந்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை சாய்த்த ஹேரத் 99 டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் மொத்தமாக 433 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது கிரிக்கெட் வாழ்க்கையினை முடித்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நான்கு நாட்களுடன் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த புதன்கிழமை (14) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...