அகில தனஞ்செய, அஞ்செலோ மத்தியூஸ் கலக்கலுடன் இலங்கைக்கு அபாரமான ஆறுதல் வெற்றி !!

தொடரை இழந்திருந்த நிலையிலும் கூட, தொடரின் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி மிகப்பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு ஆறுதல் வெற்றியைப் பெற்று நம்பிக்கையுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.

178 ஓட்டங்களால் இன்று தென் ஆபிரிக்க அணியை வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்துகொண்டது.

இது கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் விளையாடப்பட்ட 100வது பகலிரவு ஒருநாள் சர்வதேசப் போட்டியாகும். 100 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் விளையாடப்பட்ட நான்காவது மைதானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இன்று நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது.
அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களைப் பெற்றார். 11 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு சிக்ஸரை உள்ளடக்கிய மத்தியூஸின் ஆட்டத்தில் அணிக்கு வேகமாக ஓட்டங்களை சேர்ப்பதில் இருந்த ஆர்வத்தில் தன்னுடைய தனிப்பட்ட சதம் பெறுவதில் கவனம் செலுத்தவில்லை என்பது ரசிகர்களிடம் பெருமதிப்பை ஏற்படுத்தியது.

இதன் மூலம் இலங்கையில் வைத்து தன்னுடைய கன்னி ஒருநாள் சதம் பெறும் வாய்ப்பையும் இழந்தார் மத்தியூஸ்.

இதுவரை கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் துரத்தியடிக்கப்பட்ட மிகப்பெரிய இலக்கு 288. இந்திய அணி 2012இல் இலங்கையை வெற்றிகொண்டிருந்தது.
தென் ஆபிரிக்கா 300 என்ற சாதனை இலக்கை நோக்கி துடுப்பாடிய தென் ஆபிரிக்கா நான்காவது பந்திலேயே அம்லாவை சுரங்க லக்மாலின்  இழந்தது.
அதன் பின்னர் அவரோடு சேர்ந்து புதிய பந்தைப் பகிர்ந்துகொண்ட சுழல்பந்து வீச்சாளர் அகில தனஞ்செயவின் சுழல் வலையில் சிக்கித் தடுமாறியது தென் ஆபிரிக்கா.

அணியின் தலைவர் குயிண்டன் டீ கொக் 54 ஓட்டங்களை எடுக்க மற்ற எல்லோரும் தடுமாறி 25 ஓவர்களுக்குள் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

தனஞ்செய 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள். இது அவரது தனிப்பட்ட சிறந்த பெறுபேறு மட்டுமன்றி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கையின் பந்துவீச்சாளர் பெற்றுள்ள மிகச்சிறந்த பெறுதியாகவும் அமைந்துள்ளது.

இலங்கை அணி பெற்ற இன்றைய 178 ஓட்ட வெற்றி இலங்கை அணி தென் ஆபிரிக்காவுக்கு எதிராகப் பெற்றுள்ள இரண்டாவது பெரிய வெற்றியாகும்.

அகில தனஞ்செய போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
இந்தத் தொடரிலும் அவர் 14 விக்கெட்டுக்களை வீழ்த்திக்கொண்டார்.

தொடர் நாயகனாக தென் ஆபிரிக்காவின் ஜேபி டுமினி தெரிவானார்.
227 ஓட்டங்களை பெற்ற டுமினி, 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் 235 ஓட்டங்களையும்  தென் ஆபிரிக்க அணியின் தலைவரான டீ கொக் 213 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒற்றை T20 போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.



கருத்துரையிடுக

புதியது பழையவை